கடந்த 2013 ஆம் ஆண்டு, 'அரசன்' என்கிற படத்தில் நடித்து கொடுப்பதாக நடிகர் சிம்பு பெற்ற 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்காவிட்டால் அவருடைய வீட்டை ஜப்தி செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சிம்புவை எச்சரித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு சர்ச்சைக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர். இதுவரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடும் விமர்சனங்களை சந்தித்த சிம்பு, கடந்த ஒரு வருடமாக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு திரைப்படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 

மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கம் 'செக்க சிவந்த வானம்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிம்பு. கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து 'அரசன்' என்ற பெயரில் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ஐம்பது லட்சம் ரூபாய்முன் பணமாக கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் சிம்பு மும்பணத்தை பெற்று கொண்டு படத்தில் நடிக்காமல் சில தாமதங்கள் ஏற்பட்ட காரணத்தால், படம் நடிக்க முடியாமல் போனது. மேலும் இந்த படத்திற்காக வாங்கிய முன் பணத்தையும் சிம்பு திருப்பி தரவில்லை. இதனால் கொடுத்த முன் பணத்தை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தபோது, குறித்த காலத்தில் பட தயாரிப்பு பணிகளை துவங்காததால், தனக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டதாகவும்,  அதனால் முன் பணத்தை முடக்க வேண்டும் என நடிகர் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் படப் பணிகள் துவங்காததால் இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சிம்பு தரப்பு சமர்ப்பிக்க வில்லை எனக்கூறி, முன்பணமாகப் பெற்ற 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து, 85 லட்சம் ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என, நடிகர் சிம்பு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நான்கு வாரங்களில் இந்த தொகைகை வழங்காவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.