என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற படம் மீண்டும் வெளியிட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 1980-களில் நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம்.

 

ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். நடிகர் வினுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சில்க்ஸ் ஸ்மிதா. இயக்குநர் திருப்பதி ராஜன், நடிகை சில்க் ஸ்மிதாவை வைத்து 1995 ஆம் ஆண்டு ராக தாளங்கள் என்ற படம் எடுத்தார். 

ஆனால் அந்த படம் வெளியாகாமல் நின்று போனது. அந்த படத்தை வெளியிட இயக்குநர் திருப்பதி ராஜன் முயன்று வருகிறாராம்.சில்க் ஸ்மிதா கடைசியாக நடித்தது ராக தாளங்கள் படம்தானாம். இந்த படத்தில் சாதி பிரச்சனையைப் பற்றி பேசி இருந்ததால் சென்சாரில் பிரச்சனையாகி விட்டது. அதனால் இந்த படம் அப்போது வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தை வெளியிடும் முயற்சியில் இயக்குநர் ராஜன் இறங்கியிருப்பதால், வெள்ளித்திரையில் மீண்டும் சில்க் ஸ்மிதாவை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் இருக்கின்றனர்.2011 ஆம் ஆண்டு நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து "டர்டி பிக்சர்" என்ற இந்தி படம் வெளியானது. இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வசூலையும், பல விருதுகளையும் குவித்தது. சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யா பாலனுக்கு தேசிய சிறந்த நடிகை என்ற விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.