’இப்போது அவரோடு சேர்ந்து நடிக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை. இந்தி நடிகர் இர்ஃபான் கானுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த நடிகர் யார் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதிதான்’ என்கிறார் கமலின் செல்ல மகள் ஸ்ருதிஹாசன்.

ஹரி சூர்யா கூட்டணியின் ‘சிங்கம் 3’ படத்துக்குப் பின்னர் லண்டனில் இசையமைக்கிறேன் பேர்வழி என்று காதலருடன் டூயட் பாடித்திரும்பிவிட்டு சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி, எஸ்.பி.ஜனநாதன் இணைந்திருக்கும் ‘லாபம்’ படத்தின் தமிழ் ரசிகர்களுக்கு கருணை காட்டியிருக்கிறார் ஸ்ருதி.

இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று தினங்களுக்கு முன் ராஜபாளையத்தில் தொடங்கியிருக்கும் நிலையில் இதில் இணைந்தது குறித்துப் பேசிய ஸ்ருதி, “நடிப்பில் கொஞ்சம் ஆர்வம் குறைந்திருந்து இனி இசை மட்டுமே என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்த வேளையில், ‘லாபம்’ படம் என்னைத் தேடி வந்தது. படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் என்னை இப்படத்துக்குள் கொண்டு வர அணுகிய விதமும் அவர் சொன்ன கதையும் மறு பேச்சின்றி இப்படத்தை ஒப்புக்கொள்ளவைத்தது.

இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி. இப்போது அவரோடு சேர்ந்து நடிக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை. இந்தி நடிகர் இர்ஃபான் கானுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த நடிகர் யார் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதிதான். தனக்குக் கொடுக்கப்படுகிற அத்தனை கேரக்டர்களுக்கும் நியாயம் செய்துவிடுகிற தரமான நடிப்பு அவருடையது. படத்தின் கதையும் எனது கேரக்டரும் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது’ என்கிறார் ஸ்ருதி.