முன்னணி ஹீரோயின்கள் நடிக்க சம்மதிக்காமல் தலை தெறிக்க ஓடும் நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியின் முதல் கட்டப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தேனியில் துவங்கவிருப்பதாகவும் அதில் அண்ணாச்சியின் பெருமைகளைப் பேசும் இண்ட்ரோ பாடல் மட்டும் எடுக்கப்படவிருப்பதாகவும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாச்சி அருளை கோடம்பாகத்தின் நம்பர் ஒன் ஹீரோவாக்கும் முஸ்தீபுடன் ஜேடி-ஜெர்ரி இயக்கவிருக்கும் மெகா பட்ஜெட் படத்தின் ஹீரோயின் இதுவரை கமிட் பண்ணப்படவில்லை என்று தெரிகிறது. அண்ணாச்சி டூயட் பாட ஆசைப்பட்ட நயன்தாரா தொடங்கி ஹன்ஷிகா, தமன்னா ஆகிய யாருமே ஒப்புக்கொள்ளாததால் அடுத்த ஹீரோயின் சாய்ஸை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழ் நடிகைகள் தன்னை தொடர்ந்து இன்சல்ட் பண்ணிவருவதால் அண்ணாச்சியின் அடுத்த சாய்ஸ் இலியானா, தீபிகா படுகோன் போன்ற இந்தி நடிகைகளாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் இயக்குநர்கள் வட்டாரம்.

ஆனாலும் அதற்காக படப்பிடிப்பை இனியும் தள்ளிப்போட விரும்பாத இயக்குநர்கள் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொஞ்சம் துரிதப்படுத்தி அண்ணாச்சியின் பேர் பார் [bar அல்ல] முழுக்க ஒலிக்கும்படி ஒரு பாடலை வாங்கியிருக்கிறார்கள். டிசம்பர் முதல்வாரம் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பின் முதல் கட்டமாக அப்பாடல் மட்டும்  ஷூட் பண்ணப்பட உள்ளது. பதினெட்டுப் பட்டி ஜனங்களும் அண்ணாச்சியை ஆரத்தி எடுத்து வாழ்த்திப்பாடி ஊரை விட்டு வெளியேறும் அண்ணாச்சி சென்னையில் செழித்து அடுத்து உலகம் முழுக்க தனது கொடியை எப்படி பறக்கவிடுகிறார் என்பதாகப் போகிறதாம் கதை. ஆனாலும் சரியான ஹீரோயின் கிடைக்காத கவலையில் கொஞ்சம் மெலிந்துதான் போயிருக்கிறாராம் அண்ணாச்சி.