பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை திடீர் என உயிரிழந்துள்ளது, பாலிவுட் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

67 வயதாகும் ரிஷி கபூர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு நியூ யார்க் சிட்டியில் உள்ள உயர்தர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சற்று உடல் நலம் தேறிய அவர் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்தடைந்தார்.

இதையடுத்து திடீர் என இவருக்கு நேற்று உடல் நலம் மோசமானதால், மும்பையில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் ஏப்ரில் 30 இன்று காலை 5 :30 மணியளவில்  உயிரிழந்ததாக அவருடைய குடுபத்தினர் தெரிவித்துள்ளனர். 

100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ள ரிஷி கபூருக்கு, நீத்து சிங் என்கிற மனைவியும்,  ரிதிமா கபூர் என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர்.

பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மறைவின் சோகத்தில் இருந்து , இன்னும் வெளிவராத பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த தகவல் மேலும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரைபிரபலங்கள் இவருடைய மறைவிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.