Soori: ஆசையோடு ஓட்டு போட வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஆதங்கத்தோடு வெளியிட்ட வீடியோ !
நடிகர் சூரி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்ற, சென்ற நிலையில் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு விட்டதாக கூறி, ஓட்டு போடாமல் திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வருகின்றது. பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனஅனைவருமே... மிகவும் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் பிரபலங்கள் வந்து வாக்களித்து வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
அதேபோல் செல் போன் பயன்படுத்து கூடாது என்பது போன்ற சில விதிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டன. அனைத்து இடங்களிலும் மிகவும் சுமூகமாக தேர்தல் நடந்து வரும் நிலையில், கை குழந்தையோடு வரும் பெண்கள், முதியோர்களுக்கு சிறப்பு அனுமதியும் அளிக்கப்பட்டது.
மேலும் காலை முதலே பிரபலங்கள் வாக்களித்து விட்டு, தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டதாக கூறி, புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நடிகர் சூரி, தன்னுடைய வாக்கினை செலுத்த... மனைவியுடன் சேர்ந்து வாக்கு சாவடிக்கு சென்ற போது, நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய் விட்டதாக கூறி இந்த முறை அவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு கூறியுள்ள சூரி, தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றவே வாக்களிக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் வாக்களித்து வருகிறேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய் விட்டதாக கூறுகிறார்கள். என் மனைவியின் பெயர் மட்டும் உள்ளது. அவர் மட்டும் வாக்களித்துள்ளார்.
ஓட்டு போட வந்து, ஓட்டுப்போடாமல் செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. எனினும் அனைவரும் தங்களின் ஓட்டை 100 சதவீதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.