நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக, எல்லையில் தங்கள் உயிரை தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்காக இந்தி நடிகர் ஷாருக்கான் சிறப்பு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தீபாவளிக்கு நாட்டு மக்கள் அனைவரும் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான் ஆகியோர் ‘சந்தேஷ்2சோல்ஜர்ஸ்’ என்ற ஹேஸ் டேக்கில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விடுத்துள்ள செய்தியில், “ உலகில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். குறிப்பாக நமது நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நமது வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். அவரின் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் நல்ல உடல்நிலையை இறைவன் கொடுக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்பின், அவர் எழுதிய கவிதையில், “ எங்கள் பாதங்கள் கம்பளத்தில் இருக்கிறது; வீரர்களின் பூட்ஸ் அணிந்த பாதங்கள் மண்ணில் இருக்கின்றன; நமக்கு ஒவ்வொரு நாளும் நிலையாகச் செல்கிறது; அவர்களுக்கோ புதிய சவால்கள் வந்துகொண்டே இருக்கின்றன; நமக்கு இரவுகள் இன்பமாக கழிகின்றன; அவர்களுக்கு மன அழுத்தத்தோடு கழிகிறது

நாம் வாழும் வாழ்க்கை அவர்கள் கொடுத்தது; ராணுவ வீரர்களின் ஆபத்தான பணியை உருவகம் செய்ய முடியாது. ஆதலால் அந்த ஹுரோக்களை இன்னும் எந்த கவிதையிலும் குறிப்பிடாமல் இருக்கக் கூடாது. நமது வீரர்களின் சண்டை, போராட்டத்தினால் தான், நமது நாடும் வலிமையாக இருக்கிறது; மூவர்ணகொடியும் நிமிர்ந்து பறக்கிறது'' என தெரிவித்துள்ளார்.