தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் விட்ட இடத்தைத் தொட்டுப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் ஒரு வழியாக அவர் நடிக்கவிருக்கும் மூன்றாவது பட அறிவிப்பை நேற்று வெளியிட்டிருக்கிறார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நிலையில் 2015ம் ஆண்டு ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தந்தையைப்போலவே ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமானார் சண்முகபாண்டியன். 6 அடி உயரத்துக்கும் மேல் ஓங்குதாங்காக இருந்த சண்முகப்பாண்டியனாரின் அப்படம் படுதோல்வி அடைந்ததை ஒட்டி, மீண்டும் அவருக்கு 2018ல்தான் அடுத்த பட வாய்ப்பு வந்தது. ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கியிருந்த ‘மதுர வீரன்’என்ற அந்தப்படமும் சோபிக்கவில்லை.

இதை அடுத்து தனது மகனுக்கு சப்போர்ட்டாக விஜயகாந்தும் நடிக்கவிருக்கிறார் என்கிற கவர்ச்சியான அறிவிப்புடன் தொடங்கப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ என்ற படமும் கேப்டனின் உடல்நலக்குறைவில் பூஜையோடு நின்று போனது.

இந்த நிலையில் சண்முகப்பாண்டியரின்  அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பூபாலன் இயக்கவுள்ள இப்படத்தை ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக அண்ணி  ரோனிகா சிங் என்ற நடிகை நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் வம்சிகிருஷ்ணா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.