கால்வாசி படமே முடிந்துள்ள ‘இந்தியன்2’படத்தின் அடுத்த ஷெட்யூல் போபாலில் நடக்கவுள்ள நிலையில் அங்கு எடுக்கப்படவிருக்கும் ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டும் இயக்குநர் ஷங்கர் 40 கோடி பட்ஜெட் கேட்டுள்ளதாக பகீர் தகவல்கள் வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக விடைபெற்று முழுவீச்சில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ‘இந்தியன் 2’படத்துக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல். இதுவரை சுமார் 25 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விஷவாயுக் கசிவுக்கு உள்ளான போபாலில் நடைபெறவுள்ளது. இங்கு எடுக்கப்படவிருக்கும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றுக்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திடம் 40 கோடி பட்ஜெட் ஒதுக்கச் சொல்லியுள்ளதாகவும், அதை தயாரிப்பு நிறுவனமும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடவுள்ளார்களாம். இக்காட்சியை தேசிய விருதுபெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார். 

போபாலைத் தொடர்ந்து, அடுத்து தைவான்,ஐரோப்பா என பறக்கவுள்ளது இந்தியன் 2 படக்குழு. இந்நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு முன்னால் இரண்டு சவால்கள் இருக்கின்றன. முதலாவது இப்படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கு மேல் போனால் மீதிப்பணம் ஷங்கரின் சம்பளத்திலிருந்தே செலவழிக்கப்படும். அடுத்தது கமல் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை டிசம்பர் இறுதிக்குள் முடித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.