முந்தைய படத்தின் கண்டினியூட்டி குறித்து கவலைப்படாமல்,தன்னிடம் அனுமதி கேட்காமல், தனது தலைமுடியை வெட்டிக்கொண்ட ஹீரோவுக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் மலையாளப்படத் தயாரிப்பாளர் ஒருவர்.

மலையாள சினிமாவின் இளம் ஹீரோ ஷேன் நிகம். ’இஷ்க்’, ’கும்பளங்கிநைட்ஸ்’உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், இப்போது ’வெயில்’, ’குர்பானி’ படங்களில் நடிக்கிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.அதில், நான் ’வெயில்’,’குர்பானி’ படங்களில் நடித்து வருகிறேன். ’வெயில்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட் டதால், குர்பானி படத்தில் நடித்து வருகிறேன். எனது கெட்டப்பை மாற்ற வேண்டும் என்று குர்பானி இயக்குநர் சொன்னார். வெயில்’பட குழுவின் அனுமதி பெற்று தலைமுடியை வெட்ட தீர்மானித்தோம். எனது புதிய கெட்டப் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டேன். 

அதை பார்த்த ’வெயில்’தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ், முடி வெட்டியதால் கன்டினியூட்டி இருக்காது என்று கூறி போனில் என்னைக் கடுமையாகத் திட்டினார். என்னை வாழ விடமாட்டேன்என்று மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.இதற்கு ஆதாரமாக அவர் பேசிய போன் பேச்சு பதிவையும் ஷேன்நிகம் அளித்துள்ளார்.இந்நிலையில் ஷேன் நிகமின் புகாரை மறுத்துள்ள தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ், வெயில் ஷூட்டிங் முடியும் வரை முடியை வெட்டக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டோம். அதை மீறி அவர் வெட்டி விட்டார். இதனால், எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து வருகிறேன். நான் அவரை மிரட்டவில்லை. என் படத்தை முடித்து தராமல் அவர் தான் இழுத்தடிக்கிறார்என்றார்.

ஆனால் அவரது பதிலால் திருப்தி அடையாத ஷேன் நிகம் தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு...’தயாரிப்பாளர் ஜோபி மூலம் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனது ரசிகர்கள்தான் என்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றவேண்டும்’என்று அலறி வருகிறார்.