நள்ளிரவில் காரில் சென்ற நடிகையின் காரை மடக்கி பாலியல் தொல்லை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கொல்கத்தாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா. தனக்கு நடந்த வன்முறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உஷோஷி சென்குப்தா 2010 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸாக இருந்தார். அவரது பதிவில் ‘பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது. ஓட்டுநரை தாக்கி தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் ஓடி சென்று புகார் தெரிவித்தேன். ஆனால், அவர் அந்த பகுதி தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை எனக்கூறி வேறு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படி கூறினார். 

பின்னர் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். இல்லையென்றால் அவர்கள் டிரைவரை கொன்றுவிடுவார்கள் என்றும் கூறினேன். எனவே அந்த போலீஸ் அதிகாரிகள் வர சம்மதித்தார்கள். தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் அவர்களை பிடிக்க முற்பட்டபோது, அவர்களை தள்ளிவிட்டு சிறுவர்கள் ஓடிவிட்டனர். 

இத்துடன் இந்த சம்பவம் நிறைவு பெறவில்லை, இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை காலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என டிரைவரிடம் கூறிய நான் என்னையும், எனது சக ஊழியரையும் வீட்டில் இறக்கிவிடும்படி கேட்டுகொண்டேன். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அந்த கும்பல் எங்கள் காரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்களை எங்கள் கார் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தினர். 

என்னை தரதரவென்று வெளியே இழுத்து என்னுடைய செல்போனை உடைக்க முயன்றனர். நான் சத்தமாக கத்தி கூச்சலிட்டேன். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக உதவிக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க பவானிபோர் காவல்நிலையத்திற்கு சென்றேன், அங்கு என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் ஊபர் டிரைவரின் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். ஒரே நேரத்தில் ஒரு புகாருக்காக இரண்டு எப்ஐஆர் பதிய முடியாது என கூறிவிட்டார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோ அடிப்படையில் காமுகர்களான அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.