கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்துள்ள பாலியல் புகார் உண்மையா என்று தனது தங்கையிடம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கேட்டுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் மி டூ இயக்கத்தின் வாயிலாக வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. இதில் அதிகம் அடிபடும் பெயர்கள் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களாகத் தான் உள்ளனர். 

இந்தியாவிலும் மி டூ இயக்கம் வலுப்பெற்றுள்ளது. இதற்கு சாட்சி தான் கவிஞர் வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் பாலியல் புகார். சுவிட்சர்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது வைரமுத்து தன்னை அவரது ஹோட்டல் ரூமுக்கு அழைத்தார் என்று பகீர் புகாரை அளித்தார் சின்மயி. இதற்கிடையே கவிப்பேரரசு வைரமுத்துவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணையாத பாடல்கள் மிகவும் சொற்பம் என்கிற அளவிற்கு, இவர்கள் இருவரும் பூவும், நாரும் போன்றவர்கள். ஏ.ஆர்,ரஹ்மானின் இசையில் சின்மயியும் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். 

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் பிசியாக உள்ளார். இந்த நிலையில், அவரது சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானா தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்த போது வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் குறித்து பேசினார். வைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மையா என்று தனது சகோதரர் ஏஆர்.ரஹ்மான் தன்னிடம் கேட்டதாக அவர் தெரிவித்தார். 

மி டூ இயக்கத்தை தாம் ஆதரிப்பதாகக் கூறிய ஏ.ஆர்.ரெய்ஹானா, ஆனால் வைரமுத்துவுக்கு பயந்து கொண்டு தான் இவ்வளவு நாள் பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்லாமல் இருந்ததாக சின்மயி கூறுவதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார். வைரமுத்துவின் லீலைகள் குறித்து பல பெண்கள் சொல்லக் கேட்டிருப்பதாகக் கூறிய ரெய்ஹானா, ஆனால் தன்னிடம் அவர் மரியாதையுடன் தான் நடந்து கொண்டதாகவும், எனவே அவரைப் பற்றி குறை சொல்ல எந்த உரிமையும் தனக்கில்லை என்றார் .

ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது கவிதைகள் மிகவும் சிறப்பாக உள்ளதாக தாம் கூறியதாகவும் அப்போது வைரமுத்து புன்னகைத்ததாகவும் ரெய்ஹானா நினைவு கூர்ந்தார். அவர் மீது 15 வருடங்களுக்குப் பின் சின்மயி பாலியல் புகார் கூறி இருப்பதாக தெரிவித்த ரெய்ஹானா, இதை முதலிலேயே கூறி இருக்கலாமே என்றும், இவ்வளவு நாள் வளர விட்டிருக்கக் கூடாது என்றும் அறிவுரை கூறினார். 

வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள சின்மயி எதற்காக அவரது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைக்க வேண்டும், எதற்காக ஆசிர்வாதம் பெற வேண்டும், இதெல்லாம் தேவையற்றது தானே என்ற வாதத்தையும் ரெய்ஹானா முன் வைத்துள்ளார். மேலும் வைரமுத்துவைப் பற்றி மட்டும் பேசுவது ஏன் என்று கேட்டுள்ள அவர், இன்னும் நிறைய பாடகர்கள் மீதும் புகார் எழுந்துள்ளதே அது பற்றியும் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.