நிலானி தன்னை காதலித்து விட்டு அவமரியாதை செய்துவிட்டதால் லலித்குமார் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால்  நடிகை நிலானி  தலைமறைவாகி உள்ள நிலையில்,  நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள்  உள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குன்னூரில் பதுங்கி இருந்த நடிகை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலானி, மீண்டும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய காதலனான வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார், நிலானியிடம் திருமணம் குறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.  லலித்துடன், காலில் மெட்டி போட்டு அவருடைய காலுக்கு முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனக்கும் லலித்துக்கும் எந்த சம்மதமும் இல்லை என கூறி வரும் நிலானி, லலித்தை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து, விசாரணைக்காக வளசரவாக்கத்திலுள்ள நிலானியின் வீட்டிற்கு இன்று போலீசார் சென்று பார்த்தபோது,  நிலானியின் 2 குழந்தைகள் அங்கு இருந்துள்ளன. ஆனால், நிலானியை காணவில்லை.  இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, நிலானி மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தவே போலீசார் சென்றுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்தனர். நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.