செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ரேடியன்ஸ் மீடியா சார்பில் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. அதில், எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக்கோரப்பட்டது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இன்று தாக்கல் செய்த மனுவில், ரூ.60 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள 81 லட்சத்து 34 ஆயிரத்து 846 ரூபாயை ஜூலை 31ம் தேதிக்குள் 12 சதவீத வட்டியுடன் செலுத்திவிடுவதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளோம். எனவே படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது. 

பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், படத்தை வெளியிட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ரேடியன்ஸ் ஆர்ட் நிறுவனம் தெரிவித்ததை அடுத்து இடைக்கால தடையை நீக்கியதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் நாளை திட்டமிட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியாக உள்ளது. 

இதையடுத்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திற்கிடையேயான பிரச்சனை நீதிமன்றத்தால் சரிசெய்யப்பட்டு விட்டது. இந்த பட ரிலீஸ் ஆக வேண்டுமென பிரார்த்தனை செய்த, காத்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி” என பதிவிட்டுள்ளார்.