இறுதியாக சூர்யாவை வைத்து செல்வராகவன் எடுத்த "என்.ஜி.கே." படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின்னர் தனது தம்பி தனுஷை வைத்து "புதுப்போட்டை 2" படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் "இரண்டாம் உலகம்-2", "ஆயிரத்தில் ஒருவன் 2" என அடுத்தடுத்து செல்வராகவன் பிரம்மாண்ட பிளான் வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது  கடந்த 2 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை" தற்போது ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேனனின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், பி.மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து  தயாரித்துள்ளது. 2017ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய அப்படம் நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. திகில் கதை அம்சம் கொண்ட அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கடந்த ஆண்டு யுவன் சங்கர் ராஜா தான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இடையே வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் 3 பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அப்போது கூட பட ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விரைவில் என்ற வார்த்தையை வெளியிட்டுள்ள படக்குழு, படம் ரிலீஸ்க்கு தயார் என்பதை சூசகமாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளது.