அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  வேறொரு இயக்குநருடன் மேலும் ஒரு புதிய படத்தை அறிவித்து செல்வா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார்  தனுஷ்.

செல்வராகவன் இயக்கத்தில் சமீப வருடங்களில் வெளிவந்த படங்கள், அதிலும் குறிப்பாக ‘காப்பான்’படம் சூப்ப்ர் ஃப்ளாப் அடைந்த நிலையில் அவர் வேறு வழியின்றி தம்பி தனுஷிடமே தஞ்சமடைந்தார். தனது மார்க்கெட் தொடர் வெற்றிகளால் அஜித்,விஜயை நோக்கி நகர்ந்துவரும் நிலையிலும் அண்ணனாச்சே என்ன செய்வது என்று ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ்,’கதையை மட்டும் கவனமா ரெடி பண்ணுங்க. மாரி செல்வராஜோட ‘கர்ணன்’முடிஞ்ச உடனே ஸ்டார்ட் பண்ணலாம் என சொல்லியிருந்தார். அப்படம் இன்னும் சில தினங்களில் துவங்கி மார்ச் ஏப்ரலில் முடிவரையும் என்பதால் மே அல்லது ஜூன் மாதம் செல்வராகவன் படத்துக்கு தனுஷ் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த உற்சாகத்தில் தனது வீட்டில் இருந்தபடியே தனுஷ் படத்துக்கு திரைக்கதை எழுதும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று செல்வா சில தினங்களுக்கு முன்பு ட்விட் பண்ணியிருந்தார். ஆனால் அந்த எண்ணத்தில் மண் விழும்படி ‘ராட்சசன்’இயக்குநர் ராம் குமாருடன் இணைந்து தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வந்திருக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படம் செல்வா படத்துக்கு அடுத்துதான் இருக்கும் என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் செல்வா படம் ராம்குமார் படத்துக்கு அடுத்துதான் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக செல்வா இன்னும் ஒரு வருடம் வரை காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.