பிரபல திரைப்பட நடிகையை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகர், வெறும் ரூ.500 கொடுத்து, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்தி நடிகர் அர்மான் கோலி, தன்னுடன் ஒரே வீட்டில் 3 ஆண்டுகள் வாழ்ந்த மாடல் அழகி நீரு ரந்தவாவை தாக்கியதாக கைது செய்யப்பட்ட விவகாரம் ஓய்ந்த நிலையில், தற்போது பெங்காலி திரைப்பட நடிகை சயந்திகா பானர்ஜியை, நடிகர் ஜாய்குமார் முகர்ஜி தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

பெங்காலி திரைப்பட உலகில் 2009ஆம் ஆண்டு நுழைந்து, 2010ல் வெளியான டார்கெட் தி பைனல் மிஷன் என்ற படத்தில் ஹிட் அடித்த நடிகை சயந்திகா பானர்ஜியும், அதே படத்தில் சயந்திகாவுடன் நடித்த ஜாய்குமார் முகர்ஜியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்து, கிசுகிசுக்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த இருவரும், சில மாதங்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாகவும் வாழ்ந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சயந்திகா – ஜாய்குமார் இடையிலான காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். இருப்பினும், அண்மையில் ஜாய்குமாரும், சயந்திகாவும் நடித்து வெளியான உமா என்ற திரைப்படம் ஹிட் ஆன நிலையில், மீண்டும் சயந்திகாவுடன் வாழ ஜாய்குமார் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகை சயந்திகா பானர்ஜியோ, வேறு ஒருவருடன் பழகி வந்ததால், ஆத்திரமடைந்த ஜாய்குமார் முகர்ஜி, அவரை பல இடங்களில் பின் தொடர்ந்துள்ளார். ஆனாலும், அவருக்கு பிடிகொடுக்காத சயந்திகா, தொடர்ந்து அவரை தவிர்த்து வந்தார். இந்நிலையில், சயந்திகா ஜிம்முக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரை ஜாய்குமார் அதிவேகமாக காரில் பின் தொடர்ந்துள்ளார்.

சயந்திகா வீட்டை அடைந்ததும், குடிபோதையில் இருந்த ஜாய்குமாரும் உள்ளே நுழைந்து, தம்முடன் வருமாறு சயந்திகாவை அழைத்துள்ளார். ஆனால், வரமுடியாது என அவர்  அடம்பிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜாய்குமார், நடிகை சயந்திகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது, ஜாய்குமாரின் மேனேஜரும் உடனிருந்துள்ளார்.

தாக்குதலால் காயமடைந்த நடிகை சயந்திகா தொலைபேசி மூலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், ஜாய்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் மீது தாக்கி காயம் ஏற்படுத்துதல், வேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த அலிபோர் நீதிமன்றம், காவல்நிலைய ஜாமீன் வழங்க உத்தரவிட்டதை அடுத்து, வெறும் ரூ.500 செலுத்தி, ஜாய்குமார் வெளியில் வந்துள்ளார்.