துணை இயக்குனர் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதை ஏ.ஆர்.முருகதாசிடம் சென்றதன் பின்னணியில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. செங்கோல் எனும் படத்தின் கதையை தான் சர்கார் என்று எடுத்துள்ளதாக கூறி வரும் வருண் ராஜேந்திரனின் இயற்பெயர் ராஜேந்திரன். சினிமாவிற்காக தனது பெயரை வருண் ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தை இவர் சுற்றி வருகிறார். 

இந்த நிலையில் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோல் என்கிற ஒரு கதையை தயார் செய்து அதனை எழுத்தாளர் சங்கத்திலும் வருண் பதிவு செய்து வைத்திருக்கிறார். செங்கோல் கதையை எப்படியாவது படமாக எடுத்துவிட வேண்டும் என்று கடந்த 10 வருடங்களாக மிகத் தீவிரமாக வருண்ராஜேந்திரன் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அதுவும் செங்கோல் படத்தில் விஜயை கதாயாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் அதி தீவிரமாக வருண் ராஜேந்திரன் முயற்சித்ததாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து வருண் ராஜேந்திரன் கதை கூறியதாக சொல்லப்படுகிறது. கதை பிடித்து போனாலும் அந்த சமயத்தில் விஜயை வைத்து அரசியல் ரீதியாக படம் எடுக்க முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கையை விரித்துவிட வேறு வழியில்லாமல் சிறிது காலம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வருண் ராஜேந்திரன் பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனராக பணியாற்றினாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் செங்கோல் கதையை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கூறி வந்ததாக வருண் ராஜேந்திரன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் முருகதாஸ் இயக்கியிருப்பது அரசியல் படம் என்றும் அதில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்றும் விஜய் கூறிய போது வருண் ராஜேந்திரனுக்கு ஒரு பொறி தட்டியுள்ளது. 

மேலும் ஒரு விரல் புரட்சி என்கிற பாட்டை கேட்ட போது எஸ்.ஏ.சிக்கு செங்கோல் கதையை கூறிய நியாபகம் வருண் ராஜேந்திரனுக்கு வந்துள்ளது. உடனடியாக எழுத்தாளர் சங்கத்திற்கு சென்று பாக்யராஜிடம் நடந்தவற்றை கூறியுள்ளார் வருண் ராஜேந்திரன். அவரும் உடனடியாக முருகதாஸ் தரப்பை தொடர்பு கொண்டு கதைவிவரத்தை கேட்டுள்ளார். முதலில் தயங்கிய முருகதாஸ் பிறகு கதையின் கருவை மட்டும் கூற பின்னர் திரைக்கதையின் சாராம்சத்தையும் பாக்யராஜ் போராடி பெற்றுள்ளார். 

செங்கோல் – சர்கார் கதை மற்றும் திரைக்கதையின் சாராம்சத்தை பார்த்த பாக்யராஜ் இரண்டும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்ததுடன் உடனடியாக செட்டில்மென்ட்டை முடிக்குமாறு முருகதாசை வலியுறுத்தியுள்ளார். ஆனால் முருகதாஸ் சன் பிக்சர்ஸ் – விஜய் ஆதரவு இருக்கும் என்கிற நம்பிக்கையில் முருகதாஸ் முரண்டு பிடித்துள்ளார். பின்னர் தான் எஸ்.ஏ.சி மூலமாக கதையை பெற்று சின்ன சின்ன  மாற்றங்கள் செய்துள்ள ரகசியத்தை பாக்யராஜ் போட்டு உடைத்துள்ளார். 

இதன் பிறகு பிரச்சனை தீவிரமாக எஸ்.ஏ.சியிடம் வருண் ராஜேந்திரன் கதை சொல்லியதையும் அந்த கதையைத்தான் தற்போது பட்டி டிங்கரிங் பார்த்து முருகதாஸ் சர்காரை உருவாக்கியுள்ளதையும் சன் பிக்சர்ஸ் கவனத்திற்கும் பாக்யராஜ் கொண்டு சென்றுள்ளார்.  விஜயை அரசியல்வாதியாக நடிக்க வைக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.ஏ.சி தற்போது செங்கோல் கதையை சர்கார் கதையாக முருகதாசை வைத்து மாற்றி சன் பிக்சர்சை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் உடனடியாக முருகதாசை தொடர்பு கொண்டு பிரச்சனை முடிக்குமாறு கூறவே செட்டில்மென்ட் முடிந்ததாக சொல்கிறார்கள்.