சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் முருகதாஸ் சமரசம் செய்து கொண்டது நடிகர் விஜயை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனே கத்தி திரைப்படம் வெளியான சமயத்தில் அப்போது உதவி இயக்குனராக இருந்த கோபி நயினார் அந்த படத்தின் கதை தன்னுடையது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த கதை எங்கும் பதிவு செய்து வைக்கப்படாத காரணத்தினால் முருகதாஸ் எந்த பிரச்சனையும் இல்லாமல் கத்தி படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் இருந்து வெளியே வந்தார். 

கத்தி படத்தின் கதைக்கு உரிமை கோரிய கோபி நயினார் தான் நயன்தாராவை வைத்து அறம் என்று படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர்.  மேலும் தனது கதையை கத்தி என்ற பெயரில் முருகதாஸ் எப்படி படமாக்கினார் என்பதையும் அப்போதே கோபி நயினார் விளக்கமாக கூறியிருந்தார். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் முருகதாஸ் தனது அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் மீண்டும் முருகதாசுடன் விஜய் இணைந்து சர்காரில் நடிக்க ஆரம்பித்தார். 

கத்தி விவகாரத்தில் கசப்பான அனுபவம் இருந்த காரணத்தினால் சர்காரில் முருகதாஸ் கவனத்துடன் இருப்பார் என்று விஜய் நம்பியுள்ளார். ஆனால் அந்த நம்பிக்கை உடைந்து தற்போது சுக்கு நூறாகியுள்ளது. சர்கார் திரைப்படமே கள்ள ஓட்டுக்கு எதிரானது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு படத்தின் கதையே திருடப்பட்ட கதை என்று கிட்டத்தட்ட நிரூபணமாகியுள்ளது. 

இதன் காரணமாக படத்தின் இமேஜ் மட்டும் அல்ல தனது இமேஜூம் பாதிக்கப்படும் என்பது விஜய் நன்கு அறிந்த ஒன்று தான். இருந்தாலும் கூட கத்தி திரைப்படத்தை போல நீதிமன்றம் சென்று முருகதாஸ் வென்று வருவார் என்றே விஜய் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் கதைக்கு உரிமை கோரியவருடன் முருகதாஸ் சமரசம் செய்து கொண்டது விஜய்க்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் தற்போது சர்கார் படத்தின் கதை என்ன என்று விரிவாக சமூக வலைதளங்களில் வெளியாகிவிட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. இனி திரைக்கதை காப்பாற்றினால் மட்டும் தான் சர்கார் தப்பி பிழைக்கும். இல்லை என்றால் விஜயின் தோல்விப் பட வரிசையில் சர்காரும் இணைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட மன உலைச்சலால் விஜய் இயக்குனர் முருகதாசுக்கு ஒரு பெரிய கும்புடு போட்டு அனுப்பி வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இனி முருகதாசுடன் இணைந்து படம் நடிப்பது என்பது இயலாத ஒன்று என்கிற முடிவுக்கும் விஜய் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.