விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் அருள் அண்ணாச்சி சினிமா ஹீரோவாகி விட்டதால் அவரை பற்றிய செய்திகள் ஹாட் டாபிக்காகி வருகின்றன. அடுத்த மாதம் ஷூட்டிங் கிளம்புகிறார் அண்ணாச்சி.  இந்தப்படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள்.

 

இந்தப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடிபோட கேட்ட நயன்தாரா நழுவி விட்டார். அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட அரை டஜன் ஹீரோயின்களை நாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட அண்ணாச்சியுடன் டூயட் பாடத் தயாராக இல்லை. விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பவில்லை’என முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். வேறு வழியின்றி ஹிந்தி ஹீரோயின்களை நாடி மும்பையில் டேரா போட்டிருக்கிறார்கள். 

அவர்களும் நோ சொல்லி விட்டால் முற்றிலும் புதுமுகத்தை களமிறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களாவது பரவாயில்லை. எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம். எங்கள் படத்திற்கு இசையமைத்து தாருங்கள் என என்று அனிருத் வீட்டுக் கதவை தட்டி இருக்கிறார்கள். அட அங்கேயும் அவர்களுக்கு அதிர்ச்சி. முடியாது என ஒற்றை வார்த்தையில் முகத்திலடித்தாற்போல கதவை சாத்தி விட்டாராம் அனிருத். அட, இது என்ன அருள் அண்ணாச்சிக்கு வந்த சோதனை என நொந்து போய் தவிக்கிறதாம் இயக்குநர் தரப்பு.

இது ஒருபுறம் நழுவல் என்றால் மற்றொரு விஷயத்தில் ரொம்பவே ஹேப்பி அண்ணாச்சி... பிறகு சும்மாவா? நான்கைந்து படங்களில் நடித்து புகழ்பெற்ற பிறகே சினிமாவில் தளபதி, தல, ஸ்டார், நாயகன் என தங்களது பெயருக்கு முன்னால் பட்டத்தை  சூட்டிக் கொள்வார்கள். அல்லது ரசிகர்கள் சூட்டுவார்கள். ஆனால், அருள் அண்ணாச்சி ஏற்கெனவே விளம்பரப்படங்களில் நடித்து புகழ்பெற்று விட்டதால், ரசிகர்கள் அதிகம். அவர்கள் அருள் அண்ணாச்சிக்கு பட்டத்தை இப்போதே சூட்டி விட்டார்கள். அதாவது  பவர் புல் ஸ்டார் சரவண அருள் என்கிற பட்டத்தை சூட்டியுள்ளார்கள். 

பவர் ஸ்டார் சீனிவாசனை இந்தப்பட்டம் ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும்  அண்ணாச்சியின் ரசிகர்கள் பவர் ஃபுல்லாக இருப்பதால் அவருக்கு இந்த பட்டம் கனகச்சிதமாகவே இருக்கும் என்கிறார்கள்.