’ஏ1’ பட டீசரில் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும்  சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக , நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சந்தானம் படத்துக்கு நல்ல ஒரு விளம்பரமாக அமைந்துள்ளது.

சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் இன்று ஒரு புகார் அளித்தார். அந்த  புகார் மனுவில்,...நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ‘லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி’, ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி’ ‘மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,’ காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன் என்றும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற 27-ந்தேதி திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்’என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக வெளியாகியிருந்த முதல் டீஸரிலும் சந்தானம் பிராமண சமூகத்தை நக்கலடிக்கவே செய்திருந்தார். அந்த டீஸரில் பூணூல் போட்ட அய்யர் ஒருவர் ‘நாங்க ரொம்ப ஆச்சாரம்’என்று சொல்ல சந்தானம் ரொம்ப கூலாக ‘ஆனா நாங்கள்லாம் பீச்சோரம்’என்று கலாய்ப்பார்.