கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.  இதனை நீக்க வேண்டும் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது, நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' படத்தின் போஸ்டரில் சந்தானமும் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'சர்க்கார்'. இந்த படத்தின் போஸ்டர், கடந்த வருடம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ஆம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

இதில் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்ததால், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் இந்த போஸ்டரை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும் பொது சுகாதாரத்துறையும் இந்த காட்சியை நீக்க வேண்டும் என கூறியது. பின்  விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இணையதளத்தில் இருந்தும், சமூகவலைதளங்களில் இருந்தும் நீக்கப்பட்டது.

மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க, அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத் துறையைச் சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இதே புகைப்பட காட்சியில் சிக்கியுள்ளார் நடிகர் சந்தானம்.

முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே, காமெடி நடிகர்களுக்கும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் காமெடி நடிகர்கள் படங்கள் என்றால் மிகவும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தன்னுடைய காமெடியால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சந்தானம்.

இவர் தில்லுக்கு துட்டு 2 படத்தைத் தொடர்ந்து தற்போது 'டகால்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் சந்தானம் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தற்போது மற்றுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.