தில்லுக்குத் துட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பாலிவுட் நடிகை தாரா அலிஷா பெர்ரி நடிக்கவுள்ளார். 

நடித்தால் ஹீரோ தான் என்று அடம்பிடிக்கும் சந்தானத்துக்கு அவர் ஹீரோவாக நடித்துள்ள பல படங்கள் தடைபட்டு நிற்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படம் நிதிப் பிரச்சனையால் தடைபட்டு நிற்கிறது. சர்வர் சுந்தரத்தின் டிரெய்லர் பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று வரை வந்தபாடில்லை. ஓடி ஓடி உழைக்கனும், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்கள் வெயிட்டிங்கில் உள்ளன.  

இதன் காரணமாக தில்லுக்குத் துட்டு என்ற காமெடி, திகில் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சந்தானம் இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இயக்குகிறார். சந்தானத்தின் ஹீரோ ஆசைக்கு தீனி போடும் விதமாக அவரது நடிப்பில் ஓரளவு முதிர்ச்சி காட்டிய படம் தில்லுக்குத் துட்டு. இந்தப் படத்தை அவரே தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, படத்தின் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் தில்லுக்குத் துட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ஜான்சன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க. அது யார் என்றால் கவர்ச்சி நடிகை தாரா அலிஷா பெர்ரி தான் சந்தானத்துடன் டூயட் பாடவுள்ளார். 

தெலுங்கில் 100 % லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் தாரா அலிஷா. அதன் பிறகு மணி, மணி மோர் மணி, என்ற தெலுங்கு படத்தில்நடித்தார். பின்னர் மஸ்த்ரம் என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கால் பதித்தார். இணையதள தொடர் ஒன்றிலும் நடிகை படுபிசியாக உள்ளார். கவர்ச்சியில் ஓவர் டோஸ் காட்டும் இந்த நடிகை தான் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதுமட்டும் அல்லாமல் பாஜிராவ் மஸ்தானியின் படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் யதின் கர்யேகரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சர்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிக்கவுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். சந்தானத்துடன் சந்தோஷ் நாராயணன் முதன்முதலாக இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.