பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ரிலீசான ‘சஞ்சு’ படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். இவர் திறமையான நடிகர் என்பதை கடந்து, போதைப்பழக்கம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக, சிறை தண்டனையும் பெற்றவர் ஆவார். இதனால், அவர் பற்றி பொது மக்களிடையே அதிருப்தி உள்ளது. 

இந்நிலையில், சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து, சினிமா படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ராஜ்குமார் ஹிரானி இயக்க, ரன்பீர் கபூர் சஞ்சய் தத் வேடத்தில் நடிக்க, சஞ்சு என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. 

பரேஷ் ராவல், விக்கி கவுசல், மனிஷா கொய்ராலா, தியா மிர்சா, சோனம் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘’சஞ்சு’’ படம், 2 வாரங்கள் முன்பாக உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.  

சஞ்சய் தத் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் வெளுத்து வாங்கியிருக்கும் இந்த படத்திற்கு, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதன்காரணமாக, 2 வாரங்களில், சஞ்சு படத்தின் வசூல் ரூ.500 கோடிய கடந்துள்ளது. இது புதிய சாதனையாகும்.

இதன்படி, இந்தியா முழுவதும் ரூ.378 கோடியை வசூல் செய்துள்ள சஞ்சு படம்  வெளிநாடுகளில் ரூ.122 கோடியையும் வசூலித்துள்ளது. பாகுபலி படத்திற்குப் பின் இந்திய திரைப்படம் சர்வதேச அளவில் அதிக வசூலை ஈட்டும் படமாக சஞ்சு உள்ளது. 

இந்திய அளவிலும் ரூ.300 கோடி வசூலை விரைவில் எட்டிப்பிடிக்க உள்ளது. இது மட்டுமின்றி, சஞ்சு படத்திற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்தே வருகிறது. இதன்காரணமாக, படத்தின் வசூல் மேலும் புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளதாக, விநியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர். 

அதேசமயம், சஞ்சு படம் பற்றி காரசார விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குற்றப் பின்னணி கொண்ட சஞ்சய் தத்தை ரொம்ப நல்லவர் போல இந்த படம் காட்டியுள்ளதாகவும் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. 

இதற்கு சஞ்சய் தத் நேரடியாகவே பதில் அளித்துள்ளார். இந்தியா டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக சஞ்சு படம் எடுக்கப்படவில்லை. நல்ல பெயர் எடுப்பதற்காக, ரூ.40 கோடி பட்ஜெட்டில் யாராவது படம் எடுப்பார்களா.. உள்ளதை உள்ளபடியே அந்த படத்தில் காட்டியுள்ளோம். படத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது. யதார்த்தத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.