‘அஞ்சான்’ என்ற காவியப்படத்திற்கு அப்புறம் 4 வருட இடைவெளி எடுத்துக்கொண்டு லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் ’சண்டக்கோழி2’. படத்தின் முதல் பாகம் வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டதாலோ என்னவோ, அதில் இருந்த சுவாரசிய சமாச்சாரங்கள் இதில் ஏராளமாக மிஸ்ஸிங்.

 சுருக்கமாகச் சொன்னால், ஒரு திருவிழா அதற்குள் கொஞ்சம் பாசம், இன்னும் கொஞ்சம் காதல், இன்னும் இன்னும் கொஞ்சம் பழிவாங்கல் இதுதான்  ’சண்டக்கோழி2’வின் கதை. நாங்க 4 வருஷமா அக்கப்போர் பண்ணி ரெடி பண்ணுன கதையை மூனே வரியில முடிக்கிறது நியாயமா சார் என்று லிங்குபாய் சண்டைக்கோழியாக மாறிவிடுவார் என்பதால் கதையை கொஞ்சம் விலாவாரியாகப் பார்ப்போம்...

திரைப்படங்களில் திருவிழா என்றாலே அது நின்றுபோய்த்தானே இருக்கவேண்டும்? அப்படி விஷாலின் ஊரில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையால் ஊர்த்திருவிழாவே நின்றுபோயிருக்கிறது. ஊர்ப்பெரிய மனிதனுக்கு அழகாய் அந்த நின்று போன திருவிழாவை மீண்டும் நடத்தி, லிங்குவின் கதையையும் கொஞ்சம் நகர்த்த போராடுகிறார் ராஜ்கிரண். 

இன்னொரு பக்கம் அதே ஏழு ஆண்டுகளுக்கு முன் அதே திருவிழாவில் தன் கணவனைப் பறிகொடுத்த வரலட்சுமி, அவரைக் கொன்ற குடும்பத்தை அடியோடு கருவறுக்க சபதமெடுத்து ஒவ்வொருவராக வெட்டிச்சாய்க்கிறார். அக்குடும்பத்தில் ஒரே ஒருவர் மிஞ்ச வேண்டுமே, அவரை ராஜ்கிரண் எடுத்து வளர்த்திருக்கவேண்டுமே, அந்த ஒருவனை 7 வருடம் கழித்து துவங்கவிருக்கும் திருவிழாவில் வரலட்சுமி கொல்லத்துடிக்கவேண்டுமே, அவரை விஷால் க்ளைமேக்சில் காப்பாற்றவேண்டுமே... என்று மீதிக்கதை வழக்கமான மந்தை ஆட்டுக்கூட்டத்தின் வழியில் சரியாய் பயணிக்கிறது.

சக்தியின் துல்லியமான ஒளிப்பதிவு யுவனின் பின்னணி இசை உட்பட்ட தொழில்நுட்ப சமாச்சாரங்களில் அவ்வளவாய் சோடைபோகாத படம், எடைக்குப்போடக்கூட ஆகாத ஒரு கதையால் பரிதாபமாய் காட்சி அளிக்கிறது. சத்தியமாய் மீரா ஜாஸ்மின் இடத்தில் கீர்த்தியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. முதல் பார்ட்டில் பண்ணிய ஸ்கோரில் கொஞ்சமும் இறங்காதவர்கள் என்று பார்த்தால் அது ராஜ்கிரணும், யுவன் ஷங்கர் ராஜாவும் மட்டுமே. 

மற்றபடி விஷால் ஒரு நாலு படியும், இயக்குநர் லிங்குசாமி பதினெட்டு படியும் சறுக்கியிருக்கிறார்கள். அடுத்தும் ஆக்‌ஷன் படம் பண்ணுவதாக இருந்தால் கொஞ்சம் கவுரவம் பார்க்காமல், தற்போது கூடவே படம் ரிலீஸ் செய்திருக்கிற வெற்றிமாறனிடம் லிங்கு அசிஸ்டெண்ட் டைரக்டராய் வேலை கற்றுக்கொள்வது நல்லது. வெற்றி உதவி இயக்குநர்களுக்கு கைநிறைய சம்பளம் தருகிறாராம் என்பது கூடுதல் தகவல்.