திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தார் பிரபல  இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.

மதுரையில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வாக்கு சேகரித்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரகனி கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று முதல்தலைமுறை வாக்காளர்களிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், கட்சிக்குகளுக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையிலே சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். இளையதலைமுறை எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு நிச்சயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மதுரையின் புகழான கீழடியை உலகம் முழுவதும் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வேள்பாரியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன் என்றும் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் திமுக கூட்டணிக்கு நான் ஆதரவாக வரவில்லை என்று தெரிவித்த சமுத்திரகனி, எனது நெருங்கிய நண்பர் என்ற முறையில் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் இயக்குநர்கள் கரு.பழனியப்பன், ராஜூமுருகன், லெனின் பாரதி நடிகை ரோகினி, கவிஞர் யுக பாரதி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.