தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரக்கனி. இவரது மகன் ஹரி விக்னேஸ்வரன் தற்போது சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். 

இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைத்தேன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கே, சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான, 'நாடோடிகள்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பின்னர் போராளி, நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக ஜொலித்தார்.

அப்பா, சாட்டை போன்ற படங்களின் மூலம் தான் ஒரு தலைசிறந்த நடிகன் என்பதை நிரூபித்த சமுத்திரகனிக்கு, வெற்றிமாறனின் விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது நடிப்பில் பிசியாகி உள்ள அவர், கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். 

தற்போது இவர் கைவசம் இந்தியன் 2, டான், அந்தகன், ஆர்.ஆர்.ஆர், பீம்லா நாயக், சர்காரு வாரி பட்டா, மாறன், நான் கடவுள் இல்லை என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. 

இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார். இவரும் தனது தந்தையைப் போல நடிப்பு, இயக்கம் என ஆல்ரவுண்டராக தனது பயணத்தை தொடங்கி உள்ளார். இவர் அறியா திசைகள் என்கிற குறும்படத்தை இயக்கி உள்ளதோடு, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை சமுத்திரகனி தனது நாடோடிகள் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.