நடிகை சமந்தா அக்கினேனி ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர், சமீபத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்மூலமாக, தெலுங்கு சினிமாவில் பிரபலமான ‘அக்கினேனி’ குடும்பத்தில் ஒருவராக சமந்தாவும் இணைந்தார்.

திருமணம் முடிந்த நிலையில், அதிக ஓய்வு எடுக்காமல், தொடர்ந்து ரங்கஸ்தாலம் உள்ளிட்ட புதிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார். சில நாட்கள் முன்பாக, சமந்தா, நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பத்தை கவனிக்கப் போகிறார் என்றும், குழந்தைக்கு தாயாகப் போகிறார் என்றும் திடீரென வதந்தி பரவியது. 

இதற்கு, சமந்தா தரப்பில் அவரது கணவர் நாக சைதன்யா மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், ‘’நடிப்புதான் சமந்தாவுக்கு முதல் குடும்பம். அதில் இருந்து அவர் தற்காலிகமாக ஓய்வு எடுப்பார். ஒருபோதும் நிரந்தரமாக நடிப்பில் இருந்து விலகமாட்டார்,’’ எனக் கூறியிருந்தார். 

இந்த சூழலில், சமந்தா அக்கினேனி தற்போது ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கப் போவதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2004ம் ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான கொலேட்ரல் என்ற படத்தை தழுவியதாக, சமந்தா நடிக்கும் புதிய படம் தயாரிக்கப்பட உள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ்பெற்ற கிரிசய்யா இந்த படத்தை இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

இதில் வரும் மேக்ஸ் என்ற கதாபாத்திரத்தைப் போல சமந்தாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதுநாள் வரை கவர்ச்சி பதுமையாக வலம்வந்த சமந்தா, திருமணத்திற்குப் பின் நடிப்புக்கு முழு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதன்படி சமீபத்தில் ரிலீசான ரங்கஸ்தாலம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதன் அடுத்த முயற்சியாக, ஹாலிவுட் ரீமேக் படத்தில் ஆக்சன் நடிகையாக, சமந்தா களம் இறங்கப் போகிறார். இதற்காக, தினசரி ஜிம்மில் அவர் தீவிர உடற்பயிற்சியும், சண்டை பயிற்சியும் செய்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.