மான் வேட்டையாடிய வழக்கு…. இம்முறை தண்டனையில் இருந்து தப்புவாரா சல்மான்கான்?

மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 5 பேர், வரும் 25ம் தேதியன்று நேரில் ஆஜராகக் கோரி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அந்த பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், சல்மான்கான் சுட்டதில் சின்காரா, கலைமான் வகைகளை சேர்ந்த 3 அரியவகை மான்கள் கொல்லப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

பின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, சல்மான் கான் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

 

இந்த வழக்கில் வரும் 18-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சல்மான் கான், நீலம், தபு உள்ளிட்ட 5 பேர், வரும் 25ம் தேதியன்று ஆஜராகக் கோரி  ஜோத்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அன்றைய தினம் தீர்வு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.