இன்னொருவரின் கதையைத் திருடுவதற்கு கூச்சநாச்சம் பார்ப்பதில்லை என்பதில் தமிழுக்கும் தெலுங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பிரபாஸின் சமீபத்திய ரிலீஸான ‘சாஹோ’ கூட ஒரு ஃப்ரெஞ்ச் படத்தின் திருட்டு என்பதை அப்பட இயக்குநரே வெளியிட்டுள்ளார். அத்தோடு நில்லாமல் 'என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள்' என்று சாஹோ படத்தைக் குறிப்பிட்டு பிரெஞ்சு இயக்குநர் ஜெரோம் சல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி ரூபாய். படத்தின் ரிப்போர்ட் மிக சுமார் என்றாலும் வசூல் சிறப்பாகவே உள்ளது.

இந்நிலையில் ’சாஹோ’ வெளியான (ஆகஸ்ட் 30) அன்று பிரபல பிரெஞ்சு இயக்குநர் ஜெரோம் சல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். அதன் உள் அர்த்தம் புரியாமல் ரசிகர்கள் பலர் குழப்பத்தில் இருந்தனர். அந்த பதிவின் பின்னூட்டத்திலும் ஏராளமான ரசிகர்கள் புரியவில்லை என்று கூறிவந்தனர்.

சம்பந்தப்பட்டவர்களின் குழப்பத்தை தெளிவிக்க,  கடந்த இரு தினங்களுக்கு முன்பு (செப்டம்பர் 1) ஜெரோம் சல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது லார்கோ வின்ச் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது படமும் முந்தைய படத்தைப் போலவே மோசமாக இருப்பது போல தெரிகிறது. எனவே தெலுங்கு இயக்குனர்களே.. என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.கடந்த 2008ஆம் பிரெஞ்சு மொழியில் வெளியான ‘லார்கோ வின்ச்’ படத்தை ஜெரோம் சல்லி இயக்கியிருந்தார். அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கும் முதல் படம் கடந்த ஆண்டு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வெளியான ’அஞ்ஞாதவாசி’. அப்போதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை ஜெரோம் எழுப்பியிருந்தார்.இதே போல் பல வருடங்களுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ படத்தின் போஸ்டர் ‘லார்கோ வின்ச்’ படத்தின் போஸ்டர் போல இருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.