தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தளபதி விஜய்யின் அப்பாவான இவர், சட்டம் ஒரு இருட்டறை, நான் சிவப்பு மனிதன், நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். 

கடைசியாக 'டூரிங் டாக்கீஸ்' படத்தை இயக்கியிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக ரீ-எண்ட்ரீ  கொடுக்கும் படம்தான் 'கேப்மாரி'. அவரது இயக்கத்தில் உருவாகும் 70-வது படம் இதுவாகும். 


இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள கேப்மாரி படம், சென்சார் செய்யப்பட்டு ஏ சர்டிஃபிகேட்டுடன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் கடைசி படம் என்ற அறிவிப்புடன் உருவாகியுள்ள 'கேப்மாரி' படத்தின் டிரைலரை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். 


ஒரு நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரைலர்தான், பார்ப்பவர்களை இது எஸ்.ஏ.சி. படமா? என அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அளவுக்கு, டபுள் மீனிங் வசனங்கள், லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் நிறைந்துள்ளன. 

சமூக அக்கறையுடன் கூடிய பல படங்களை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகரா, இப்படி மாடர்ன் கலாச்சாரம் என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக கேப்மாரி படத்தை எடுத்துள்ளார் என ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். 


ஒரு பக்கம் மகன் படங்களில் புரட்சி செய்து நல்ல பெயரை எடுக்க, மறுபக்கம் அதை கெடுக்க அப்பா எஸ்.ஏ.சி. போதும் என்ற அளவுக்கு சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 'கேப்மாரி' படத்தின் டிரைலரே கடும் விமர்சனத்தை சந்தித்தி வரும் நிலையில், படம்  வெளியானால் எத்தகைய எதிர்ப்புகளை சந்திக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.