ஆர்.ஆர்.ஆர் (RRR) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் அஜித் (Ajith) உடனான சந்திப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி (Rajamouli) மனம்திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இப்படத்தை தயாரித்து உள்ளார். 

2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

அதே சமயம் வலிமை படத்துக்கு போட்டியாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படமும் ரிலீசாக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இப்படம், வருகிற ஜனவரி 7-ந் தேதி உலகமெங்கும் திரைகாண உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழில் இப்படத்தை புரமோட் செய்யும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி நடத்தி உள்ளது. பிரபல தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் அஜித்துடனான சந்திப்பு குறித்து இயக்குனர் ராஜமவுலி தெரிவித்தார். அவர் கூறியதாவது : “ ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் அமைந்துள்ள பெரிய ரெஸ்டாரண்ட்டிற்கு சாப்பிட சென்றிருந்தேன். அந்த நேரத்தில் அங்கு கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது நடிகர் அஜித்தும் அங்கிருக்கும் ஒரு டேபிளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் என்னை பார்த்ததும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் சட்டெனே எழுந்து வந்து விட்டார். என் அருகில் வந்து நலம் விசாரித்தார். இதனால் நான் நெகிழ்ந்து போனேன். பின்னர் அவரது டேபிலுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் என் மனைவியும் அங்கு வந்தார். அவர் எனது டேபிளில் என்னை தேடினார்.

ஆனால் நான் அவரை அஜித் சார் டேபிளுக்கு அழைப்பதற்காக திரும்பி கை காட்டினேன். அப்போது அதை கவனித்த அஜித் ‘உங்க மனைவியா?’ என என்னிடம் கேட்டார். நானும் ஆமா சார் என்று சொன்னவுடன், எழுந்து சென்று என் மனைவியை சந்தித்து, மிகவும் தாழ்மையுடன் ‘நான் தான் அஜித்’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் என் மனைவியை அழைத்து வந்தார். அந்த அளவுக்கு பணிவுடன் இருந்தார்.‌ அவருடனான சந்திப்பும், உரையாடலும் மிகவும் சிறந்ததாக அமைந்தது” என ராஜமவுலி கூறினார்.

Scroll to load tweet…