திரையுலகில் சராசரியாக நடிகைகள் ஐந்து வருடம், முன்னணி நடிகையாக நிலைப்பதே கடினமாக உள்ள நிலையில், 16 ஆண்டுகளாக முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.  

சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியான படங்கள்  தோல்வியடைந்தாலும், சமீபத்தில் வெளியான '96' மற்றும் 'பேட்ட' ஆகிய படங்கள் மூலம் விட்ட இடத்தை பிடித்து விட்டார்.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் கதையில், 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர், சரவணன் இயக்கி வரும் ' ராங்கி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் த்ரிஷா படப்பிடிப்பு தளத்திலேயே, மயங்கி விழுந்ததாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வதந்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவியது. 

இதைக்கேட்டு அதிர்ச்சியான த்ரிஷாவின் தாயார் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் தற்போது த்ரிஷா 'ராங்கி' படத்தின் படப்பிடிப்பில் இரவும் பகலுமாக நடித்து வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.