தீண்டாமை புகார் எழுந்ததை அடுத்து சென்னையில் உள்ள ரோகினி திரையரங்க நிர்வாகம் அதுகுறித்து புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று முதல் திரையிடப்பட்டு உள்ளது. அப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டபோது, படத்தை பார்க்க ஏராளமான சிம்பு ரசிகர்கள் ஆவலோடு வந்திருந்தனர். அதேபோல் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் அப்படத்தை பார்க்க வந்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் டிக்கெட் எடுத்து படத்தை பார்க்க வந்திருந்தும், அவர்களை தியேட்டர் ஊழியர்கள் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோவும் வெளியானதை அடுத்து இந்த தீண்டாமை சம்பவம் பூதாகரமாக வெடித்தது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து ரோகினி திரையரங்க நிர்வாகத்துக்கு எதிராக கண்டனங்களும் வலுத்தன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரோகினி திரையரங்க நிர்வாகம் புது விளக்கம் ஒன்றை தெரிவித்து அறிக்கையையும் வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், பத்து தல படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த படங்களை 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும். வந்திருந்தவர்களில் 2 வயது, 6 வயது, 8 மற்றும் 10 வயதில் குழந்தைகள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க எங்கள் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். 

இதனை புரிந்து கொள்ளாமல் அங்கிருந்த ஆடியன்ஸ் ஒன்றுகூடி அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என குரல் எழுப்ப தொடங்கினர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கும் வகையில், அந்த குடும்பத்தினரை படம் பார்க்க அனுமதித்தோம்” என குறிப்பிட்டு அவர்கள் தியேட்டரில் அமர்ந்து பத்து தல படம் பார்க்கும் வீடியோவையும் ரோகினி திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... தியேட்டரில் தீண்டாமை கொடுமை... டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணை துரத்திய ஊழியர்கள் - வீடியோ