பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாரி 2'. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தில் 'ரவுடி பேபி' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி  'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை யூ-டியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். இப்பாடல் பெரும் வைரலாக பரவியது. மேலும், பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. பில்போர்ட் இசைப்பட்டியல் என்பது, அந்தந்த வாரத்தில் மக்களால் அதிகம் கேட்கப்பட்ட, விரும்பப்பட்ட பாடல்களின் பட்டியல்! 

தமிழ் சினிமாவில் அதிகப் பார்வையாளர்கள் கொண்ட பாடலாக 'ஓய் திஸ் கொலவெறி' பாடல் இருந்து வந்தது. இதுவும் '3' படத்துக்காக தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்து உருவாக்கியது.  இப்பாடல் தற்போது வரை சுமார் 175 மில்லியன் பார்வைகளைக் கொண்டுள்ளது.

இந்த சாதனையை 'ரவுடி பேபி' வீடியோ பாடல் உடைத்துள்ளது. தற்போது 178 மில்லியன் பார்வைகளோடு, தமிழ்த் திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூ-டியூப் வீடியோ என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மேலும், தென்னிந்திய திரையுலகில் 'ஃபிடா' படத்தின் 'வச்சிந்தே' வீடியோ பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இந்தச் சாதனையையும் இன்னும் ஓரிரு வாரத்தில் ரவுடி பேபி பாடல் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.