’நடிப்பது விஜய் படத்தில் என்றாலும் நான் அஜீத் சாரின் தீவிரமான ரசிகை’ என்கிறார் பிரபல காமெடியன் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.

தெறி, மெர்சல் படங்களின்  வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி இணைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் தனது மகள் இந்திரஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் 63 பட வாய்ப்பு குறித்து பேட்டியளித்திருக்கும் இந்திரஜா, ’’நாங்கள் செய்த டிக் டாக் வீடியோக்களைப் பார்த்துதான் இந்தவாய்ப்பு கிடைத்தது. என்ன கதாபாத்திரம் என்பது குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை. எனக்கு பள்ளித்தேர்வுகள் முடிந்ததும் படத்தில் இணைவேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. நடிகர் விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் அஜித்தின் தீவிர ரசிகை. அதற்காக நடிகர் விஜய்யை பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை” என்றார்.

விஸ்வாசம் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்திக்கச் சென்ற அனுபவத்தை விவரித்த ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, படப்பிடிப்பின் போது அஜித்தை சந்திக்க சிறிது நேரம் காத்திருந்தோம். பின்னர் அஜித் அங்கு வந்தார். மிகப்பெரிய நடிகர் என்று தனக்குள் நினைக்காமல் சிறிது தாமதமானதற்கு மன்னிப்பு கேட்டார். அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அஜித்தை நேரில் பார்த்த தருணத்தை விவரித்த ரோபோ சங்கரின் மகள், அவரைப் பார்த்ததும் எனது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வந்தது. அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்” என்று கூறினார். ரோபோ சங்கரும் அவரது மனைவியும் அஜீத்துடன் எடுத்த படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்திரஜா தான் தலயுடன் எடுத்துக்கொண்ட படங்களை வெளியிடவில்லை.