பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக ரசிகர்களை சம்பாதித்த ரியோ , சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த பிறகு கூடுதல் பிரபலமடைந்தார். ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து இன்று மீடியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கும் ரியோவின் சிறப்பே அவரின் காமெடி தான். 

மற்றவர்கள் சிரிக்கும் விதமாக அதே சமயம் யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை செய்வது இவரின் தனி சிறப்பு. 
இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது அதுவும் நடிகர் சிவகார்த்திகேயனால். 

சிவா கார்த்திகேயன் தற்போது எஸ்.கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் படம் தான் ”கனா”. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் தான் இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று மிகப்பெரிய அளவிலான ஸ்டாராக உருவாகி இருக்கிறார். 

இதனால் திறமையுடன் வாய்ப்பு தேடிவரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே இந்த தயாரிப்பு நிறுவனத்தை தான் ஆரம்பித்திருப்பதாக 'கனா' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். இவர்கள் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் தான் ரியோ ஹீரோவாக நடிக்கவிருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர். 

இந்த படத்தை யூடியூப் புகழ் பிளாக் ஷீப் தான் இயக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஒரு வகையில் பார்த்தால் ரியோவும் கூட சிவகார்த்திகேயன் மாதிரி தான் என்பதால் ரியோவின் வாழ்க்கையில் இந்த வாய்ப்பு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றே அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.