நயன்தாராவின் தீவிர ரசிகை நான்! ஒருவருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்வதில்லை என்னும் அரசியல் கொள்கையையும் கடந்து நான் இப்படி சொல்ல காரணம் உண்டு. ஆண் மைய சுரண்டல்வாத துறையில் பல்வேறு இன்னல்களைக் கடந்து ஓர் ஆளுமையாக நிற்கிறார் என்பதே நான் நயன்தாரா, திரிஷா, சிம்ரன் ஆகியோரைக் கொண்டாடக் காரணம். குறிப்பாக கதாநாயகர்களைப் போல் நயன்தாராவுக்கென்று ஒரு ’ஓப்பனிங்’ இருப்பது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். (ஏதோ என் வீட்டுப் பெண் போல்). அவருக்காகவே டோரா, கோ.கோகிலா இப்போது ஐரா பார்க்கச் சென்றேன். பெருத்த ஏமாற்றம்.

அந்த படம் குறித்து விமர்சனம் எழுதுவது கூட நேரம் வீண்! அந்தளவுக்கு கடுப்பேற்றும் படத்தை தந்திருக்கிறார் சர்ஜுன்!

படம் முழுக்க செயற்கைத்தனம்! பெண்களின் துன்பங்களாக ஆண் மைய்யப் பார்வை! பிற்போக்குத்தனமான காதல் உணர்வு! மோசமான திரையாக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக தம்மை அறிவுஜீவியாக முன்னிறுத்தும் வகையான இளைஞர்கள் பற்றிய எள்ளல்கள்.

ஒரு பெண்ணுக்கு அழகு சார்ந்த அங்கீகாரமும், காதல், திருமணம் இவைதான் வாழ்வின் இலட்சியமா? அதற்காக அவள் எந்த எல்லைக்கும் செல்வாளா? லக்ஷி, மா போன்ற மாற்று உரையாடல்களை முன் வைத்த சர்ஜுனிடம் இப்படி ஒரு கதையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எவ்வளவு சிறப்பான வாய்ப்பு கிடைத்தது சர்ஜுனுக்கு. எவ்வளவு வலுவான பெண் கதாப்பாத்திரத்தை அவர் படைத்திருக்க முடியும். அறம் போன்றதொரு கதையின் மூலம் தோழர் கோபி நயன்தாராவை எப்படி பயன்படுத்தினார், சர்ஜுன் செய்திருப்பது என்ன?

சமூகத்தின் மூட நம்பிக்கைகளின் மேல் பிழைப்பு நடத்துகிறார். பார்ப்பன புரோகிதர்களுக்கும் இதுபோல் பேய், பிசாசு, ஆன்மா, நிறைவேறாத ஆசையை தீர்க்க உடல் தேடி அலையும் பெண் என்று கதை விடுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. சரி! இது கற்பனைக்கான களம் என்று இருந்துவிட்டுப் போகட்டும். இத்தகைய பேய் படங்களில், குறைந்தபட்சம் தொழில்நுட்ப ரீதியில் பார்வையாளர்களுக்கு ஒரு பரவச அனுபவம் கிடைக்கும். ஆனால் ஐரா அந்த வகையும் இல்லை. வழக்கமான பேய் பட வார்ப்புரு (template). சமீபத்தில் நான் The age of adaline என்றொரு ஆங்கிலப் படம் பார்த்தேன், அது ஒரு காதல் கதை. ஆனால் அந்த பெண்ணின் நிலைக்கு அவர்கள் விஞ்ஞானரீதியாக சில விளக்கங்களை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். (அதில் குறைகள் இருக்கலாம்). ஆனால் இதுபோன்ற முட்டாள்தனமான பேய் படங்களில் (விட்டலாச்சார்யா படங்களே மேல். அதிலாவது அந்தகாலத்தில் தொழில்நுட்பம் சார்ந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறது) முழுக்க முழுக்க மூட நம்பிக்கையை பணமாக்கும் பொறுப்பற்ற சுயநலம் மட்டுமே செயல்படுகிறது.

வாழும்போது பெண்களால் எந்த அநியாயத்தையும் எதிர்கொள்ள முடியாதா? இப்படி பேயாக வந்துதான் அவர்கள் பழி தீர்பார்களா? பேய் என்றாலே பெண் தானா? எவ்வளவு கேவலமான பெண் வெறுப்பு இது. இதையே சர்ஜுனும் செய்கிறார். நயன்தாரா அதற்கு உடன்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஒரு பெண்ணின் பிரச்சினையாக அடுக்கப்பட்டிருக்கும் எந்த விஷயத்திலும் உண்மை தன்மையை உணர முடியவில்லை. ஏதோ செய்திகளின் தொகுப்பு போல, சமூக அக்கறையின் பெயரால் வலிந்து திணித்துக்கொள்ளும் போக்காக மட்டுமே திரையில் அது பிரதிபலிக்கிறது. வசனங்களாவது கட்டுசெட்டாக இருந்திருக்கலாம், அன்பு, காதல் என்னும் பெயரால் அதீத விளக்கவுரையாக மட்டுமே இருந்தது.

இந்த கதையை எழுதியது பிரயங்கா(பெண்)! மூட நம்பிக்கைகளாலும், பெண் என்றால் அழகு மட்டுமே அடையாளம் என்கிற ஆணாதிக்க சிந்தனையினாலும் பெண்களின் (குறிப்பாக கிராமத்து பெண்கள்) நிலை குறித்து பேச எண்ணி, பிரியங்கா வணிக சந்தையில் அதை மற்றுமொரு பண்டமாக மாற்றிவிட்டார். கலையரசனும், நயந்தாராவும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உச்சபட்ச கடுப்பு என்னவென்றால், கருப்பு பெண்ணாக நயன்தாராவுக்கு அரிதாரம். கடந்தகால கதையில் காப்ரியாலா பயன்படுத்தப்பட்டு பின் கதையில் நயன்தாராவுக்கு கருப்பு அரிதாரம்! ஏன்? தாங்களே எல்லா கதாப்பாத்திரங்களாக நடிக்க வேண்டும் என்கிற தற்காதல் (Narcissism) ஆண் கதாநாயகர்கள் சிலருக்கு உண்டு, நயனுக்குமா?

வணிக சினிமா சூதாட்டத்திற்கு நயன் பலியாக கூடாது என்பதே எனது வேண்டுகோள். சமூகத்தில் பெண்களின் நிலையை மாற்றக்கூடிய வலிமையான பெண் கதாப்பாத்திரங்களை அவர் ஏற்க வேண்டும். அத்தகைய கதைகளை கொடுக்கக் கூடிய இயக்குனர்களுக்கு மட்டுமே அவர் வாய்ப்பளிக்க வேண்டும். சர்ஜுன் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். நயன்தாராவை மட்டுமல்ல என்னை போன்ற அவரது ரசிகர்களையும் அவர் சுரண்டலுக்கு உள்ளாக்குகிறார், அல்லது சந்தையி்ல் வெற்றிக்காக நயனும் அதையே விரும்பியிருக்கிறார்!

ஐரா - படத்தின் கதை போல், நயனின் கதாப்பாத்திரங்கள் போல் படத்தின் பெயர் கூட அந்நியப்பட்டே நிற்கிறது!

-எழுத்தாளர் கொற்றவை.என்.