பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைவரிடமும் பெரிதாக எந்த ஒரு கோபத்தையும் சம்பாதித்துக் கொள்ளாமல் வெளியேறியவர் நியூட்ரல் ரேஷ்மா. இவர் அடுத்ததாக, அஜித் நடிக்க உள்ள 60 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில்,  பல ரசிகர்களின் மனதை கவர்ந்த 'வாணி ராணி', 'ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்களில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.  மேலும் 'கோ', 'மசாலா படம்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வெள்ளித்திரையில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்றால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரம். இதில் நடிகர் சூரியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி இருப்பார் ரேஷ்மா.

பின் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் நீதி துவங்கப்பட்ட,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார். தொடர்ந்து இவருக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், இவர்  வெளியேற்றப்பட்டதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ள 60 ஆவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், ரேஷ்மாவிற்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிகப்பெரிய ஜாக்பார்ட்டாகவே பார்க்கப்படுகிறது.