requesting ban for Karthi theeran movie

கார்த்தியின் தீரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சீர் மரபினர் நலச்சங்கத்தினர், மதுரை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

இந்தப் படத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் குற்றப் பரம்பரையாகச் சித்திரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் அது சட்டப்படி குற்றம் என்றும் சீர் மரபினர் நலச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த மனுவில், "குறிப்பிட்ட சாதியினரை குற்றப் பரம்பரை என்று கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் குற்றப்பரம்பரை சட்டம் அகற்றப்பட்டது.

பின்னர் சுதந்திர இந்தியாவில் குற்றப்பரம்பரையாகக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், சீர்மரபினராக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் பங்குபெறும் உரிமை அளிக்கப்பட்டது.

குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை குறிப்பிட்ட சமூகத்தின்மீது பயன்படுத்தக்கூடாது என்று ஐ.நா மன்றமே உத்தரவிட்டு, இந்திய அரசுக்கு அனுப்பியது.

ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் குற்றப்பரம்பரையினர் என வரும் வசனங்களையும், அதைக் குறிக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டுமென்று படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மதுரை ஆட்சியரிடம் கொடுத்த அந்த மனுவில் கூறியிருந்தனர்.