இதுவரை விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் தென்னகம் தவிர்த்து வட இந்தியா முழுக்கவும் ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக, அதனை வெளியிடும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க படப்புகளில் ஒன்றான ‘ஆரண்ய காண்டம்’படத்தை அடுத்து எட்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் படம் ’சூப்பர் டீலக்ஸ்’. திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தில் சமந்தா, ஃபகத் ஃபாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘இளைய’ ராஜா இசையமைத்திருக்கிறார்.

சில தினங்களுக்கு வெளியான இப்படத்தின் ட்ரெயிலர் இணையங்களில் மாபெரும் ஹிட்டடித்த நிலையில், வரும் 29ம் தேதி இப்படம் தமிழகத்திலும் கேரளாவிலும் மிக அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படம் ஆங்கில சப் டைட்டில்களுடன் வட இந்தியா முழுமையும் ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது என்கிற செய்தியை அதனை வெளியிடும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறது.
 

இதைவிட இனிப்பான செய்தி என்ன வேணும்?...விஜய் சேதுபதி ரசிகர்களே ஸ்வீட் எடுங்க...கொண்டாடுங்க...