அடுத்த மாதம் வெளியாக உள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராட்சசன் திரைப்படததின் டிரெய்லர் காண்போரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் உள்ளது.

குறும்பட இயக்குனரான ராம்குமார் முண்டாசுப்பட்டி எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இவெளிக்கு பிறகு இவர் தனது ஆஸ்தான ஹீரோவான விஷ்ணு விஷாலுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம்ராட்சசன். 

முதல் படத்தை காமெடி படமாக கொடுத்த ராம்குமார் இரண்டாவது படத்தை த்ரில்லராக கொடுத்துள்ளார். அதிலும் சைக்கோ கொலையாளி தொடர்புடைய படம் என்பது டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. அதிலும் கொலையாளியின் குரலை மட்டுமே வைத்துக் கொண்டு டிரெய்லரையே ஒரு குறும்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

டிரெய்லரை பார்க்கும் போது ராட்சசன் வழக்கமான த்ரில்லர் திரைப்படமாக இருக்காது என்று மட்டும் தெரிகிறது- பொதுவாக தமிழில் வெளியாகும் சைக்கோ கொலையாளிகள் படத்தில் அவன் கொலை செய்வதற்கு சென்டிமென்டாக ஒரு காரணத்தை கூறுவார்கள்.

ஆனால் த்ரில்லர் படங்களில் உலகப் புகழ்பெற்ற கொரியப்படங்களில் சைக்கோ கொலையாளி கொலை செய்வதற்கு காரணமே இருக்காது. ஆனால் படம் முழுக்க நம்மை சீட் நுனியில் உட்கார வைத்திருப்பார்கள். அதிலும் வாய்ஸ் ஆப் எமர்டரர் எனும் கொரியப்படத்தில் கொலையாளியின் குரல் மட்டும் தான் கேட்கும். படத்தின் எந்த சீனிலும் கொலையாளி வரமாட்டான். ஆனால் அவனை நினைத்து படத்தை பார்க்கும் நமக்கே அச்சம் ஏற்படும். அது போன்ற ஒரு படத்தை தான் ராட்சசன் என
இயக்குனர் ராம்குமார் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. அதிலும் டிரெய்லரின் ஆரம்பத்தில், என்னை நீ பிடித்தாலும் நான் நானாக இருக்க மாட்டேன் என்கிற வசனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் ஒழிந்துள்ளன. இந்த ஒரே ஒரு வசனமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.

விஷ்ணு விஷாலுடன் அமலா பால் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், காளி வெங்கட், ராதாரவி போன்றோரும் இருப்பதால் படத்தில் என்டர்டெயின்மென்டுக்கும் குறைவிருக்காது என்று நம்பலாம். எது எப்படியோ ஹாலிவுட் தரத்திற்கு ஒரு த்ரில்லர் படம் தமிழில் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களை  மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.