’வழக்கமான மசாலாப் படங்களில் நடித்து மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்ற கொள்கையினால் நிறைய தமிழ், தெலுங்குப் படங்களை இழந்திருக்கிறேன். ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை’என்கிறார் ஆந்திராவின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி ராஷ்மிகா மண்டன்னா.

கன்னட நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மீண்டும் இவர விஜயதேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ‘டியர் காம்ரேட்’படத்தின் மூலம்  ராஷ்மிகாவுக்கு ரசிகர் பட்டாளம் இன்னும் அதிகரித்திருக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ராஷ்மிகா தமிழுக்கு வந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

தமிழில் நடிப்பது பற்றிப் பேட்டி அளித்த  ராஷ்மிகா  ’கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் நான் தான் அதை ஒப்புக் கொள்வது இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் ஈகோ உள்ளது. அதனால் நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது. ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் என் நிலையில் இருந்து யோசித்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பது புரியும். நான் வெறும் பொம்மை இல்லை. நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் சில ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடியம். நான் எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன் என்பதை தாண்டி நான் நடிக்கும் படங்களை நினைத்து பெருமைப்பட விரும்புகிறேன்.

கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேனே என்று பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை. ஒரு படத்திற்கு ஹீரோ போன்றே ஹீரோயினும் முக்கியமே. ஹீரோவும், ஹீரோயினும் ஒரே மாதிரி வேலை செய்தாலும் ஹீரோயின்கள் வெகுகாலம் நீடிப்பது இல்லை. நடிகர்கள் அறிமுகமான காலத்திலிருந்து 40 வருடங்கள் வரை நீடித்துவரும் நிலையில் நடிகைகள்  15 ஆண்டு காலம் திரைத்துறையில் தாக்குப்பிடிப்பதே பெரிய சாதனையாகத்தான் இன்றுவரை இருக்கிறது’என்கிறார் ராஷ்மிகா.