படப்பிடிப்பு தளத்தில் பரிமாறப்பட்ட உணவை உண்ட 120 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dhurandhar Movie crew hospitalized : பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'துருந்தர்'. இயக்குனர் ஆதித்ய தர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லே-லடாக்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஷாக்கிங் நியூஸ் ஒன்று வந்துள்ளது. அதன்படி, படப்பிடிப்பில் பணியாற்றிய சுமார் 120 படக்குழுவினர் லேயில் உள்ள மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதே காரணம். தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருந்தர் படக்குழுவுக்கு என்ன ஆச்சு?

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை லேயில் பாலிவுட் படப்பிடிப்புக் குழுவினர் 100 க்கும் மேற்பட்டோர் உணவு உண்ட பிறகு, வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளானதாக தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக லேயில் உள்ள சஜல் நர்பு நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் இது ஃபுட் பாய்சன் என்று உறுதிப்படுத்தினர். அந்த இடத்தில் சுமார் 600 பேர் உணவு உண்டதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், நோயாளிகளின் நிலை தற்போது சீராக உள்ளது மற்றும் அவர்களில் பெரும்பாலோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் அறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.

ரன்வீர் சிங்கின் துருந்தர்

ரன்வீர் சிங் மற்றும் இயக்குனர் ஆதித்ய தரின் 'துருந்தர்' படத்தின் டீசர் ஜூலையில் வெளியிடப்பட்டது. டீசர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ரன்வீர் சிங்கின் வித்தியாசமான தோற்றம் காணப்பட்டது. இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அக்‌ஷய் கண்ணா மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்ய தர் மற்றும் லோகேஷ் தர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஒரு ரகசிய முகவரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.