ranjith told about rajini kaalaa
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த தவறான கருத்துக்கள் வசனங்களாக உள்ளது; எனவே அவற்றை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மெர்சல் திரைப்படத்தின் எந்த வசனத்தையும் நீக்க வேண்டிய தேவையில்லை என மெர்சல் படத்திற்கு ஆதரவாகவும் பாஜகவிற்கு எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையினரும் குரல் கொடுத்து வருகின்றனர்/
இந்நிலையில், மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்புத்தான் எனவும் எனவே அந்த வசனங்களை நீக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினியை வைத்து தான் இயக்கும் காலா படத்திலும் அரசியல் வசனங்கள் உள்ளன. மெர்சலுக்கு மெர்சலானா எப்படி? காலாவில் வரும் அரசியல் வசனங்கள் அதைவிட பயங்கரமாக இருக்கும் எனவும் காலா படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தில் மெர்சலை மிஞ்சிய அரசியல் வசனங்கள் இருக்கும் என ரஞ்சித் கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படமும் வெற்றி அடைந்த நிலையில், காலா மீதான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டுவரும் நிலையில், காலா படத்தில் வரும் அரசியல் வசனங்கள் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் காலா படத்தை ரஜினி ரசிகர்கள் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
