பார்ப்பதற்கு அச்சு அசல், ரன்பீர் கபூர் போலவே இருந்த, பிரபல காஷ்மீரி மாடல் ஜுனைத் ஷா, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காஷ்மீரை சேர்ந்த, ஜுனைத் ஷா ரன்பீர் கபூர் போலவே உள்ளார் என, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல மீடியா ஒன்று செய்து வெளியிடவே இவர், மிகவும் பிரபலமானார். மாடலிங் துறையில் கால் பாதிக்க ஆர்வமாக இருந்த ஜுனைத் ஷாவிற்கு, அவரின் தோற்றம் எளிதாக வாய்ப்புகளை பெற்று தந்தது.

ரன்பீர் கபூரை நடிக்க வைக்க விரும்பிய பல மாடலிங் விளம்பரத்தில் இவர் தோன்றினார். எனவே இவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒருமுறை இவரை பார்த்து, ரன்பீர் கபூரின் தந்தையும் மறைந்த நடிகருமான ரிஷி கபூர்... தன்னுடைய மகனையே பார்ப்பது போல் உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து திரையுலக பணிகளும் முடங்கியதால், ஜுனைத் ஷா, ஸ்ரீநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவர் திடீர் என ஜூன் 17 ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 28 வயதே ஆகும் இளம் மாடலான இவருக்கு தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.