தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத். டெல்லியில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனியின் கன்னட ரீமேக்கில் நடித்தார். தமிழில் தடையறத் தாக்க இவரது முதல் படமாகும். இந்தப் படத்தில் அருண் விஜயுடனான கெமிஸ்டிரி சிறப்பாக இருந்ததால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரகுல் பிரீத். லவ்கியம், கிக் 2, புரூஸ் லீ தெ ஃபைட்டர், ஆகிய திரைப்படங்களின் மூலம் தெலுங்கில் இவருக்கு செல்வாக்கு படிப்படியாக உயர்ந்தது. 

பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த இவர், ஸ்பைடர், தீரன் அதிகாரன் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் மீண்டும் தேவ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். பிசியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழும் இவருக்கு ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில், ரகுல் பிரீத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இதை அந்த நடிகையே தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ரகுல் பிரீத், தனது இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.  இன்ஸ்டாகிராம் பக்கம் சரியாகும் வரை, அதில் வரும் லிங்குகள் அல்லது தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் ரகுல் பிரீத் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவாகவே நடிகைகளின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்படுவதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் வாடிக்கையான ஒன்று தான். இதேபோல் தான் தற்போது ரகுல் பிரீத்துக்கும் நடந்துள்ளது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டதற்கான பின்னணியோ அல்லது வேறு காரணங்களோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.