பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷாரூக் கானுக்கு அண்மைக் காலமாக பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர் நடித்துள்ள ஜீரோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அறிவியல் புனைவுக் கதையான இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் நடித்துள்ளார். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், ராஞ்சனா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

இதில் ஷாரூக் கான் தனித்துவமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படம் டிசம்பரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷாரூக் கான் நடிக்கவுள்ள புதிய திரைபடத்தின் ஆர்வமூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய அடுத்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆகும். 

இந்தப் படத்தில் ராகேஷ் சர்மாவின் கதாப்பாத்திரத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளார். போபால் எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய மகேஷ் மத்தாய் தான் ஷாரூக் கானை அடுத்து இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு முதலில் சல்யூட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் புதிய படத்தின் பெயர் சல்யூட் அல்ல ஷாரே ஜஹான் சே அச்சா என்பது தான் என்று தற்போது கூறப்படுகிறது. 

பிரபல நடிகை பூமி பட்னேகர் தான் இப்படத்தில் ஷாரூக் கானின் ஜோடி என்று கூறப்படுகிறது. ராய் கபூர் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புவிரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.