தமிழ்சினிமா இதுவரை காணாத ஒரு பேரதிசயமாக 28 ஆண்டுகளுக்குப்பின்னர் நடிகர் ராஜ்கிரணும் நடிகை மீனாவும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.

1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ தமிழ்சினிமாவில் பல அதிசயங்களை நிகழ்த்திய படம். இன்று வரை கேட்கத் திகட்டாத இளையராஜாவின் பாடல்கள். ராஜ்கிரணின் அச்சு அசலான பட்டிக்காட்டு முரடனின் நடிப்பு. மீனாவின் வெள்ளந்தியான கிராமிய முகம் என்று அந்தப்படம் பட்டிதொட்டியெங்கும் படுபயங்கர ஹிட் அடித்தது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில உப்புமா படங்களில் நடித்திருந்த மீனா இப்படத்தின் மூலம் உச்ச நட்சத்திரமாக மாறி நிறைய விருதுகளும் பெற்றார். அடுத்து தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என்ராசாதான் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறிய ராஜ்கிரணும் இன்று வரை பெரிய சம்பளம் வாங்கும் குணச்சித்திர நடிகராக மாறியிருக்கிறார்.

இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ஷைலாக்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ராஜ்கிரண் ஜோடியாக மீனா நடிக்க உள்ளார்.அஜய் வாசுதேவ் இயக்குகிறார். ஏற்கனவே மம்முட்டி நடித்த ராஜாதிராஜா, மாஸ்டர் பீஸ் ஆகிய மலையாள படங்களை இவர் டைரக்டு செய்துள்ளார். கேரளாவில் நடந்த படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ராஜ்கிரணும், மீனாவும் மம்முட்டியுடன் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களின் கைதட்டலை பெற்றனர். 28 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த இந்த ஜோடியால் படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.