எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில வருடங்களுக்கு முன் ‘மங்காத்தா’ படத்துக்காக அஜித் ‘சால்ட் அண்டு பெப்பர்’ கெட் அப்பில் வந்தததுக்கே கொண்டாடியது உலகம். ஆனால் அதற்கெல்லாம் பல வருடங்கள் முன்பாகவே ஹீரோயிஸ இமேஜை உடைத்து தள்ளி, யதார்த்தமாக வாழப்பழகியவர் ரஜினி.

 

 இந்நிலையில் நடிகர் சிவகுமாரின் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய வெகு ஓப்பன் கடிதம் ஒன்று, ரஜினியின் பிறந்தநாளான இன்று வெளியாகி தெறிக்க விட்டிருக்கிறது. சக நடிகரின் திறமைகளையும், பாஸிடீவ் குணங்களையும் பாராட்டுவதில் ரஜினிகாந்த் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்பதையும், தன் மைனஸ்களை கொஞ்சம் கூட கவலைப்படாமல் வெளிபடுத்துபவர் என்பதையும் மிக துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்த கடிதம். ரஜினி தன் கைப்பட எழுதியிருக்கும் அந்த இரண்டு பக்க கடிதத்தில் உள்ள ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

* சிவக்குமாருடன் நான் நடித்த படங்கள் இரண்டு. ஒன்று புவனா ஒரு கேள்விக்குறி, மற்றொன்று கவிக்குயில். 

* அந்த காலத்தில் நான் மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரத்தில், சிவக்குமார் அவர்கள் சலிக்காமல் எனக்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டே இருப்பார். 

* இந்த கெட்ட பழக்கங்களால் உன் உடம்பை கெடுத்துக்காதே. நீ பெரிய நடிகனா வருவே.’ என்பார். 

* அப்போதெல்லாம் ‘என்னடா இந்தாளு நம்மளை நிம்மதியா விடமாட்டேங்கிறாரே!’ என சலிப்பாயிருக்கும். 

* அவர் சொன்னது பலித்தது, நான் பெரிய நடிகணும் ஆனேன். அவர் சொன்னது போல் உடம்பை கெடுத்தும் கொண்டேன். ...என்று நீள்கிறது அந்த கடிதம். இந்த கடிதம் சிவகுமாரின் குடும்பத்தை தாண்டி வெளியே வரும் என்று ரஜினி நினைத்தாரோ இல்லையோ ஆனால் என்னதான் அந்த குடும்பம் மட்டுமே வாசிக்கும் என்று நினைத்திருந்தாலுமே கூட, அதில் இப்படி தன்னை தாழ்த்தியும், தன் கெட்ட வழக்கங்களை சுட்டிக்காட்டியும், தன் உடம்பு கெட்டுவிட்டது என்பதை சொல்லியும் இருக்க வேண்டியதில்லை. ஆனால் எதையும் மறைக்காமல் வெளிப்படையாய் எழுதினார் பாருங்கள்! அதுதானே ரஜினி!